லாரி, வேன், கார் அடுத்தடுத்து மோதல்; 15 பேர் படுகாயம்
பரமக்குடி அருகே லாரி மீது வேன், காா் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே லாரி மீது வேன், காா் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
திருப்பூர் மாவட்டம் குமானந்தபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரிஷி ஜெயின் (வயது 29). இவர் தனது உறவினர்களுடன் திருப்பூரில் இருந்து ராமேசுவரத்திற்கு வேனில் வந்தார். வேன் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. அதைத் தொடர்ந்து லாரியின் பின்னால் வந்த மற்றொரு காரும் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வேன் நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது.
மேலும் லாரியின் மீது மோதிய கார் அருகில் இருந்த பள்ளத்திற்குள் உருண்டு கவிழ்ந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
15 பேர் காயம்
இந்த விபத்தில் வேனில் வந்த திருப்பூர் மாவட்டம் திருமலை நகரை சேர்ந்த நரேஷ் (56), சத்தீஸ்கர் மாநிலம் ஜெகதல்பூர் மாவட்டத்தை சேர்ந்த மீனா ஜெயின் (50) மற்றும் லாரி டிரைவரான தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளத்தை சேர்ந்த கண்ணன் (42) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீசார் லாரி டிரைவர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.