தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு சரக்கு வாகன டிரைவர் பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு சரக்கு வாகன டிரைவர் பலியானார்.
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியை சேர்ந்த செல்வம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் தினேஷ்குமார் (வயது 23), சரக்கு வாகன டிரைவர். நேற்று மாலை 7 மணி அளவில் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரெயிலில் தினேஷ் அடிபட்டார். இந்த விபத்தில் தினேஷ் குமார் கால் முறிந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் ரெயிலுடன் இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் தினேஷ் குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வாலிபர் ரெயில் அடிபட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.