ஏற்காடு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-05-15 22:59 GMT

ஏற்காடு:

ஏற்காடு வேலூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் ஏழுமலை (வயது 35). இவர் தனக்கு சொந்தமான லாரியில் நேற்று மதியம் சேலத்தில் இருந்து செங்கல் பாரத்தை ஏற்றிக்கொண்டு ஏற்காடுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்காடு மலைப்பாதையில் செங்காடு கிராமம் வாணியார் வளைவு என்னும் மேட்டு பகுதியில் சென்றபோது லாரியில் பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனை அறிந்த ஏழுமலை லாரியில் உடன் வந்த குப்பன் என்பவரிடம் கூறினார். இதையடுத்து அவர் லாரியில் இருந்து கீழே குதித்து பெரிய கல்லை எடுத்து லாரியின் சக்கரத்தின் முன் வைத்துள்ளார். ஆனால் லாரி மெதுவாக பின்னோக்கி சென்று சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த ஏழுமலைக்கு இடது கை, வலது கால் மற்றும் முதுகு பகுதியில் முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்