ஒகேனக்கல் அருகே, துக்க காரியத்துக்கு சென்ற போதுபஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

Update: 2023-05-11 19:00 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே துக்க காரியத்துக்கு சென்ற போது சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரிய நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய துக்க காரியத்துக்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒரு சுற்றுலா பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு நேற்று புறப்பட்டனர்.

இந்த பஸ்சை பாலக்கோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். ஒகேனக்கல் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் கணவாய் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி பஸ்சில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டவர்களை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சாலையில் கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்