மொபட் மீது டிராக்டர் மோதிய கோர விபத்தில் அய்யப்ப பக்தர் உள்பட 2 பேர் பலி

உடுமலை அருகே மொபட் மீது டிராக்டர் மோதிய கோர விபத்தில் அய்யப்ப பக்தர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-01-05 18:50 GMT


உடுமலை அருகே மொபட் மீது டிராக்டர் மோதிய கோர விபத்தில் அய்யப்ப பக்தர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

'கேரள மாநிலம் மறையூர் பட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் விஜயகுமார் (வயது 36). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் கவுரி சங்கர், இந்து பிரகாஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். கவுரிசங்கரும், இந்து பிரகாசும் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் உடுமலையை அடுத்த கரட்டுமடம் பகுதியிலுள்ள தமிழ்ச்செல்வியின் தாய் வீட்டுக்கு குடும்பத்துடன் அவர்கள் வந்தனர். மேலும் நேற்று உடுமலையிலுள்ள அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

டிராக்டர்-மொபட் மோதல்

அதன்படி நேற்று காலை விஜயகுமார் குடும்பத்துடன் உடுமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு பூஜைக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் அந்த கோவிலுக்கு வந்த உடுமலை யு.கே.சி. நகரைச் சேர்ந்த சாந்து மொஹம்மது என்பவரது மகன் ரஹீம் (31) என்ற அய்யப்ப பக்தருடன் சேர்ந்து மொபட்டில் விஜயகுமார் வெளியே சென்றுள்ளார்.

மொபட்டை ரகீம் ஓட்டிச்சென்றார். பின்னால் விஜயகுமார் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அருகில் வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய ரஹீம், விஜயகுமார் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த சின்ன வாளவாடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ரங்கநாதன் (வயது 54) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் சிக்கி அய்யப்ப பக்தர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்