தந்தை கண்முன்னே பிளஸ்-2 மாணவி பலி-அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது விபத்து

மேட்டூரில் லாரி மோதி தந்தை கண்முன்னே பிளஸ்-2 மாணவி பலியானார். அரையாண்டு தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.

Update: 2022-12-19 22:36 GMT

மேட்டூர்:

பிளஸ்-2 மாணவி

மேட்டூர் ஆர்.எஸ். தேசாய்நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் அதிஷா (வயது 17). இவர், மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு பள்ளியில் இருந்து தன்னுடைய தந்தை நாகராஜூடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தை கடந்து சென்றனர்.

விபத்தில் பலி

அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென, நாகராஜ் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் நாகராஜ், அதிஷா இருவரும் தூக்கி வீசப்பட்டனர். நாகராஜ் சாலையின் ஓரத்திலும், அதிஷா சாலையிலும் விழுந்தனர்.

அதிஷா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய அதிஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தன்னுடைய கண் எதிரே மகள் உயிரிழந்ததை கண்டு நாகராஜ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

ஒரே மகள்

தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான அதிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாகராஜூக்கு, அதிஷா ஒரே குழந்தை என்பதால் மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். தனது கண்முன்னே தன்னுடைய மகளை பறிகொடுத்து விட்டேனே என்று நாகராஜ் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்