ஆதனூரில் பஸ்சுக்காக காத்திருந்தபோது கார் மோதி விவசாயி பலி

Update: 2022-12-08 18:45 GMT

பென்னாகரம்:

ஆதனூரில் பஸ்சுக்காக காத்திருந்தபோது கார் மோதி விவசாயி பலியானார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரண்மனைபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 50). விவசாயியான இவர், கறவை மாடுகளையும் வளர்த்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா. இவர் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக மல்லிகா தனது கணவர் கண்ணாயிரத்தை ஆதனூருக்கு அழைத்தார். அதன்பேரில் கண்ணாயிரம் ஆதனூருக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து மல்லிகாவை மொபட்டில் ஏற்றிக்கொண்டு மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பிள்ளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

கார் மோதல்

சிறுது தூரம் சென்ற நிலையில் மொபட் பழுதானது. இதனால் கண்ணாயிரம் உறவினர் ஒருவரை வரவழைத்து, அவருடன் மல்லிகாவை பிள்ளப்பட்டிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மொபட்டை ஆதனூரில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். மாலை நேரம் ஆனதால் விவசாய வேலைகள் மற்றும் மாடுகளில் பால் கறப்பதற்காக கண்ணாயிரம் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதற்காக அவர் இரவு 7 மணிக்கு ஆதனூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வேகமாக சென்ற கார், கண்ணாயிரம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சோகம்

அந்த வழியாக சென்றவர்கள் கண்ணாயிரத்தை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணாயிரம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று, கண்ணாயிரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பஸ்சுக்கு காத்திருந்தபோது கார் மோதி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்