திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.

Update: 2022-12-01 20:49 GMT

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.

திம்பம் மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் கார், பஸ், லாரி, சரக்கு வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தமிழக-கர்நாடக மாநிலங்கள் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விடுகிறது. சில நேரம் பழுதாகி நடுரோட்டில் நின்றுவிடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தடுப்புச்சுவர் மீது லாரி மோதியது

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இரும்பு கம்பிகள் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவைக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. மதியம் திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. இதில் தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்தது. லாரியும் சேதமானது.

இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். ரோட்டோரம் இருந்த தடுப்புச்சுவர் மீது லாரி மோதி நின்றதால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்