மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் பள்ளி ஆசிரியை பலி

தாரமங்கலம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார். அவருடைய தங்கை மகன் காயம் அடைந்தார்.

Update: 2022-10-27 22:36 GMT

தாரமங்கலம்:

தனியார் பள்ளி ஆசிரியை

மேட்டூர் அருகே தங்காமபுரிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 48). இவர், கருமலைக்கூடலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை தன்னுடைய தங்கை மகன் பிரசன்னாவுடன் மொபட்டில் சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். இவர்கள், தாரமங்கலத்தில் இருந்து கே.ஆர்.தோப்பூர் படையப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கஸ்தூரி சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கஸ்தூரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்