வெண்ணந்தூர் அருகே விபத்தில் தீயணைப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலி லாரி டிரைவருக்கு வலைவீச்சு
வெண்ணந்தூர் அருகே விபத்தில் தீயணைப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலி லாரி டிரைவருக்கு வலைவீச்சு
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே நடந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலியாகினர். தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்
கரூர் மாவட்டம் மெரூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் தட்சிணாமூர்த்தி (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் திருஞானசம்பந்தம் (22), அண்ணாதுரை மகன் பிரவீன் (22). இதில் பிரவீன் தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரராக பணியாற்றி வந்தார்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று சொந்த ேவலை காரணமாக ஒரு மோட்டார்சைக்கிளில் சேலம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார்சைக்கிளை பிரவீன் ஓட்டினார். தட்சிணாமூர்த்தி, திருஞானசம்பந்தம் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.
மோதல்
இவர்கள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் அம்மன் கோவில் எதிரே நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரியும் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் கண்இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதின.
இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த 3 பேரும் உயிருக்கு போராடினர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
டிரைவருக்கு வலைவீச்சு
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தட்சிணாமூர்த்தி, பிரவீன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். திருஞானசம்பந்தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற வெண்ணந்தூர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் தீயணைப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.