நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டியில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று இந்த ரெயில்வே கேட்டின் அருகே எருமை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் எருமை மீது மோதியது. இதனால் ரெயிலில் அடிபட்டு எருமை உடல் சிதறி செத்தது. மேலும் எருமையின் கால் உள்ளிட்ட உடல் பாகங்கள் ஆங்காங்கே கிடந்தன. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த எருமையின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சேலம்-பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. இதனிடையே ரெயில் மோதி செத்த எருமை யாருடையது? என தர்மபுரி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.