மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மகன் மதுரைவீரன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர், வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து வேலை செய்தார். நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் விருவீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மீனாட்சிபுரம் பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, எதிரே உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.