ராசிபுரம் அருகே குடிசைக்குள் கார் புகுந்தது மற்றொரு விபத்தில் 2 வாலிபர்கள் காயம்
ராசிபுரம் அருகே குடிசைக்குள் கார் புகுந்தது மற்றொரு விபத்தில் 2 வாலிபர்கள் காயம்
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது. கார் பட்டணம் சக்தி நகர் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீரன்- நைனாம்பாள் தம்பதியரின் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் காரை ஓட்டி வந்த கிஷோர் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் பட்டணம் தண்டு மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குறுகிய வளைவில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை பின் தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அவர்கள் டிராக்டரை முந்தி செல்ல முயன்றதில் டிராக்டரில் மோதி இருவரும் அருகில் இருந்த சிறிய கால்வாயில் விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேருக்கும் ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.