புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி 7 பேர் காயம் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டிப்புதூர் பகுதியில் சென்றபோது, முன்னால் இரும்பு பாரம் ஏற்றி சென்ற மினி லாரி மீது மோதியது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி, எதிர்திசை சாலையில் தாறுமாறாக சென்று சேலம் நோக்கி சென்ற கார் மீது மோதி நின்றது.
7 பேர் காயம்
இதில் காரில் பயணம் செய்த 6 பேர் மற்றும் மினி லாரி டிரைவர் என மொத்தம் 7 பேர் காயம் அடைந்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை போக்குவரத்திற்கு பாதிப்பாக இருந்த விபத்திற்கு உள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரி டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் புகார் ஏதும் அளிக்காததால் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.