கார்-லாரி மோதல்; 3 வாலிபர்கள் பலி

பல்லடம் அருகே மாதப்பூரில் கார்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-10-13 18:22 GMT

பல்லடம் அருகே மாதப்பூரில் கார்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார்-லாரி மோதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 3 மணி அளவில் கோவையில் இருந்து நாமக்கல் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 43) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

3 வாலிபர்கள் பலி

மேலும் காரில் பயணம் செய்த 3 வாலிபர்கள் காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பல்லடம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். காரில் இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கார் விபத்தில் பலியானவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வையப்பமலையை சேர்ந்த பூபாலன் (22), பிரேம்குமார் (24), அருகில் உள்ள கல்லுபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மகன் நித்திஷ்குமார் (24) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் 3 பேரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள் ஆவார்கள்.

சுற்றுலா சென்றனர்

மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து இறந்த வாலிபர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் அருகே விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்