கார் டயர் வெடித்து சகோதரிகள் உள்பட 3 பேர் காயம்
திருவையாறில் கார் டயர் வெடித்து சகோதரிகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
திருவையாறில் கார் டயர் வெடித்து சகோதரிகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
காரின் டயர் வெடித்தது
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஜெயந்சந்திரன் மகள்கள் காவியா (வயது15), வெற்றிச்செல்வி (13). அதே ஸ்ரீராம் நகரை சேர்ந்த லெட்சுமிகாந்தன் மகள் பவித்ரா (13). திருவையாறில் உள்ள ஒரு பள்ளியில் வெற்றிச்செல்வியும், பவித்ராவும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
காவியா 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் ஸ்ரீராம் நகரில் இருந்து 3 பேரும் நடந்து பள்ளிக்கு சென்றனர். அப்போது தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் பள்ளி அருகே வரும்போது அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சாலை ஓரத்தில் நின்ற ஸ்கூட்டர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த காவியா, வெற்றிச்செல்வி, பவித்ரா ஆகியோர் மீது சாய்ந்தது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக பவித்ரா தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.