கூட்டணி கோரிக்கையை ஏற்று மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்மானம் - செல்வப்பெருந்தகை நன்றி

கூட்டணி கோரிக்கையை ஏற்று மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்மானம் கொடுவந்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-19 13:13 GMT

சென்னை,

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினோம்.

இதற்கு மதச்சார்ப்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள் என்ற முறையில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நானும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராமசந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் இ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் கையொப்பம் இட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம்.

அந்தக் கோரிக்கையை ஏற்று இன்று (19.04.2023) தனித் தீர்மானம் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சமூக நீதியை காக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்