பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-ஈரோடு ரெயில் நேரம் மாற்றி அமைப்பு
நேரம் மாற்றி அமைப்பு;
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-ஈரோடு ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
ஈரோடு-கோவை ரெயில்
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கோவைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு சென்று வருவதற்கு ரெயிலை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பிறகு பயணிகள் கோவைக்கு பஸ்களில் சென்று வந்தனர். இதனால் பயண கட்டணம் அதிகமானதோடு நேர விரயம் ஏற்பட்டது. எனவே ஈரோடு-கோவை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு-கோவை ரெயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்பட்டது. இந்த ரெயிலை பயணிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
கோரிக்கை மனு
கோவையில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயில் ஈரோட்டுக்கு இரவு 9.15 மணிக்கு வருகிறது. இதில் ஈரோடு அருகே தொட்டிபாளையம் ரெயில் நிலையத்தில் அதிக நேரம் ரெயில் நிற்பதாக பயணிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் ரெயில்வேத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவை - ஈரோடு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தொட்டிபாளையத்தில் தினமும் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுகிறது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. சேலத்துக்கு செல்ல வேண்டியவர்களும் ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே கோவையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரெயிலின் நேரத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நேரம் மாற்றம்
இதையடுத்து நேரத்தை மாற்றி அமைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலிங்கம், செயல் தலைவர் விக்ரம், அலுவலக செயலாளர் முருகேஷ், துணைச்செயலாளர் குமார்அருள், பொருளாளர் பழனிவேல் ஆகியோர் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "வருகிற 15-ந் தேதி முதல் கோவையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரெயில் திருப்பூருக்கு இரவு 7.15 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.35 மணிக்கும் வந்தடையும். இதனால் கரூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலையும் பிடிக்க முடியும்", என்றனர்.