சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து ஏ.சி. எந்திரம் கழன்று விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி - உறவினர்கள் போராட்டம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து ஏ.சி.எந்திரம் கழன்று விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலியானார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-13 07:20 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். சென்னையின் முக்கிய ஆஸ்பத்திரியாக இது திகழ்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெக்னீசியனாக ஒப்பந்த அடிப்படையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 62) என்பவர் பணியாற்றி வந்தார்.

திருநாவுக்கரசு, நேற்று மதியம் 12 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடம் 2-ல் உள்ள 3-வது மாடியில் இருந்த ஏ.சி.எந்திரம் திடீரென கழன்று கீழே நடந்து சென்ற திருநாவுக்கரசு மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது.

இதில் அவரது தலை, தோள்பட்டை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த திருநாவுக்கரசை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, திருநாவுக்கரசுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால், அதற்குள் திருநாவுக்கரசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாக போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கூறும்போது, "ஏ.சி.எந்திரம் கழன்று விழுந்த 3-வது மாடியில் உள்ள அறையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. ஏ.சி.எந்திரம் தானாக விழுந்ததா? இல்லை யாரும் கைதவறி கீழே போட்டார்களா? என்று தெரியவில்லை. இதற்கு மருத்துவத்துறை கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இந்த புதிய கட்டிடத்தில் பழைய ஏ.சி.எந்திரத்தை எதற்கு வைத்தார்கள். பாதிக்கப்பட்ட எங்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்