மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேச்சு; போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
அரசு பள்ளியில் மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசிய ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
சாத்தூர்,
அரசு பள்ளியில் மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசிய ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
கணித ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, ஸ்ரீரெங்கபுரம், பந்துவார்பட்டி மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 270 பேர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் மாணவிகளிடம், கணித ஆசிரியர் தாமோதரன் (வயது 50), வகுப்பறையில் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறி அந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் கல்வி அதிகாரிகள், போலீசார் இணைந்து, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கணித ஆசிரியர் தாமோதரனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தாமோதரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.