சேலத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

சேலத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை ஒரத்தநாட்டில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-17 19:39 GMT

சேலம், 

துப்பாக்கிகளுடன் 2 பேர் சிக்கினர்

சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த மே மாதம் 19-ந் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 25), எருமாபாளையத்தை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி (25) ஆகியோர் என்பதும், இவர்கள் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகை எடுத்து யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ததுடன், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு உதவியாக இருந்த அழகாபுரம் சின்னபுதூர் அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்த கபிலர் என்ற கபிலன் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் சஞ்சய் பிரகாஷ் உள்பட 3 பேரும் விடுதலைப்புலிகள் அமைப்பால் ஈர்க்கப்பட்டு உலக தமிழ் நீதி வழக்கு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்ததும், ஆயுதங்கள் தயாரித்து வன்முறைகளை அரங்கேற்ற முயன்றதும் தெரியவந்தது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்க முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 11-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கபிலர் என்ற கபிலன் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வந்தனர்.

ஒரத்தநாட்டில் கைது

இந்த நிலையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு வைத்து கபிலனை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கபிலனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்