அரசு பள்ளி எதிரே திடீரென உள்வாங்கிய சாலை
திருவட்டார் அரசு பள்ளி எதிரே திடீரென உள்வாங்கிய சாலையால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அரசு பள்ளி எதிரே திடீரென உள்வாங்கிய சாலையால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
உள்வாங்கிய சாலை
குலசேகரம்-மார்த்தாண்டம் சாலையில் திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் உள்ள சாலையில் நேற்றுமுன்தினம் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்வாங்கியது.
அதாவது 20 அடி நீளத்தில் பள்ளமாகி காட்சி அளிக்கிறது. ஒரு பக்கம் மேடாகவும், ஒரு பக்கம் பள்ளமாகவும் உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த மோசமான சாலையை கவனிக்காமல் யாரேனும் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தால் அங்கு விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. இதனால் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
சீரமைக்க கோரிக்கை
அதே சமயத்தில் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். எனவே இங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.