'நீட்' தேர்வை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-08-15 23:58 GMT

சென்னை,

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கிவரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கிறேன்.

விடியல் பயணம்

பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பஸ்சில் பயணிக்க கொண்டு வரப்பட்ட திட்டத்தின்கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதுவரை இந்த திட்டத்தில் அரசு பஸ்களில் 314 கோடி முறை பாதுகாப்பான பயணத்தை பெண்கள் மேற்கொண்டு பயன் அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு ரூ.850 சேமிக்க முடிகிறது. இந்த ஆட்சி, கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலைக் கொடுத்துள்ளதன் அடையாளமான இந்த திட்டமானது, இனி 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது.

காலை உணவு திட்டம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசு பள்ளிகளில் பயிலும், 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 25-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

விரிவாக்கப்படும் காலை உணவு திட்டத்தை கருணாநிதி பயின்ற திருக்குவளைப் பள்ளியில் தொடங்கிவைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினருக்கு பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் மூன்றரை லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில் அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இன்னொரு முன்னெடுப்பை அறிவிக்கிறேன்.

தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் பேருக்கு உரிய பயிற்சிகள் வழங்கி திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா

ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் 141 பேர் பயன் அடைந்துள்ள நிலையில், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

நீட் தேர்வை அகற்ற...

கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டதாக செயல்பட வேண்டும். மக்களுக்கு நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும் மாநில பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதை செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்