செய்வினை வைத்திருப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்வினை வைத்திருப்பதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை நூதன முறையில் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2023-10-19 02:58 IST

.

நகைகளுக்கு செய்வினை

மதுரை திருநகர் விவேகானந்தர் 5-வது தெருவை சேர்ந்தவர் சோபியா யாஸ்மின் (வயது 28). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். எனவே 2-வது திருமணத்திற்காக திருமண தகவல் மையம் மூலம் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்து கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த முகமதுசபேஸ்(33) என்பவர் அவரிடமும், அவரது தாயாரிடம் பேசி உள்ளார். பின்னர் திருமணத்திற்கு சம்மதம் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் முகமது சபேஸ் அடிக்கடி அவர்களிடம் பேசி வந்துள்ளார். அப்போது அவர் முதல் கணவரின் தாயார், சோபியா யாஸ்மின் நகைகளுக்கு செய்வினை வைத்திருப்பதாக கூறினார். அது தொடர்ந்து இருந்தால் வாழ்வில் கஷ்டம் ஏற்படும். எனவே அந்த செய்வினையை எடுக்க வேண்டும். நகைகளை கொடுத்தால் கேரளாவிற்கு சென்று மந்திரவாதியிடம் கொடுத்து செய்வினை எடுத்து தருவதாக கூறினார்.

10 பவுன் நூதனமுறையில் திருட்டு

அந்த நகைக்கு ஈடாக தான் பணம் தருவதாகவும், நகையை திருப்பி கொடுத்து பணத்தை பெற்று கொள்வதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பிய சோபியா யாஸ்மின் நகையை எடுத்து கொண்டு எல்லீஸ்நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அங்கு முகமது சபேசிடம் 10 பவுன் நகையை கொடுத்தார். உடனே சோபியா யாஸ்மின் பணத்தை கேட்ட போது அவரது வங்கி கணக்கு மற்றும் பான் எண்ணை வாங்கி அதில் செலுத்துவதாக தெரிவித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து நைசாக தப்பி சென்று விட்டார். எனவே அவருக்கு சோபியா யாஸ்மின் போன் மூலம் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவையில் அவர் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்த போது அப்படி ஒருநபர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த 10 பவுன் நகையை ஏமாற்றி திருடி சென்ற நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்