மூதாட்டியின் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.48 ஆயிரம் அபேஸ்
பூட்டிய மூதாட்டி வீட்டின் சாவியை எடுத்து திறந்து ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.48 ஆயிரத்தை அபேஸ் செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி
அரக்கோணம் மின்னல் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 70). இவர் கடந்த சில தினத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக அங்குள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.அப்போது வீட்டை பூட்டியபின் சாவியை வீட்டின் ஒரு பகுதியிலேயே வைத்துள்ளார். பாராஞ்சி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (22), இவரது கணவர் சுகன் (25) ஆகியோர் இதனை பார்த்துள்ளனர். பின்னர், சுசிலா புறப்பட்டு சென்றதும் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த கால் பவுன் நகையையும் வங்கி ஏ.டி.எம். கார்டையும் திருடினர்.
சுசிலா ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஏ.டி.எம்.ைமயத்திற்கு சென்று ரூ.48 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டு தப்பினர்.
கைது
வீட்டிற்கு திரும்பி வந்த பார்த்த சுசிலா பீரோ திறக்கப்பட்டு நகை மற்றும் ஏ.டி.எம். கார்டு திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் சுகன் ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்தனர்.