பண்ணை வீட்டை வாடகைக்கு கேட்டுவாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் அபேஸ்
ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி பண்ணை வீட்டை வாடகைக்கு தரும்படி கேட்டு வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் அனிபால் டேவிட் வேலண்டின் (வயது 27). இவர் தனது பண்ணை வீட்டை வாடகைக்கு விடுவதற்காக ஒரு வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனைப்பார்த்து கடந்த 7-ந் தேதியன்று ஒரு வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து அனிபால் டேவிட் வேலண்டினை தொடர்புகொண்டு பேசிய நபர், தான் பங்கஜ்குமார் என்றும், இந்திய ராணுவத்தில் வேலை செய்வதாகவும், உங்கள் வீட்டில் ஒரு வருடத்திற்கு வாடகைக்கு குடியிருக்க விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு அனிபால் டேவிட் வேலண்டின், அந்த நபரிடம் ஒரு மாத வாடகை ரூ.30 ஆயிரம் என்பதால் 6 மாத வாடகை முன்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை தர வேண்டும் என்றார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்த நபர், பணத்தை கூகுள்பே மூலம் செலுத்துவதாக கூறி, அனிபால் டேவிட் வேலண்டின் கூகுள்பே செயலியில் உள்ள பே-பில்லில் சென்று கிரெடிட் கார்டு பில் பேமெண்ட் ஆப்சனுக்குள் அந்த நபரின் தனியார் வங்கி கணக்கை எண்டர் செய்யுமாறு கூறினார். இதை உண்மையனெ நம்பிய அனிபால் டேவிட் வேலண்டின், அந்த நபர் கூறியவாறு செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அனிபால் டேவிட் வேலண்டின் புதுச்சேரி கிளை வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் 3 தவணைகளாக எடுக்கப்பட்டு விட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனிபால் டேவிட் வேலண்டின், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.