ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ்

நாகர்கோவிலில், அரசு பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-25 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில், அரசு பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரசு பஸ்சில்...

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து முள்ளூர்துறைக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் என பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த பஸ்சில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த சேவியர் மனைவி சுதா (வயது 59) என்பவரும் பயணம் செய்தார்.

பெண்ணிடம் நகை அபேஸ்

அந்த பஸ் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் வந்தபோது, சுதா திடீரென கூச்சலிட்டார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை என அழுது கொண்டே கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

மேலும், சுதா பஸ் முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சுதாவிடம் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராமன்புதூரில் இறங்கிய சுதா, இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரிடம் நகையை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர் சம்பவம்

கடந்த சில நாட்களாக மாநகர் பகுதியில் நகைபறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, செல்போன், பணம் உள்ளிட்டவற்றையும் மர்மநபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

எனவே, இத்தகைய குற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்