ஆவின் பால் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2023-03-30 19:12 GMT

சென்னை,

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முகவர்களுக்கு பால் சப்ளையைக் குறைத்தது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு முடங்கியுள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி, உடனடியாக பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்