ரூ.100 கோடி வருமானத்தை மறைத்த ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் -வருமானவரித்துறை தகவல்
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
சென்னை, வடபழனியை தலைமையிடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கந்தசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை தொடங்கி உள்ளது.
முறையாக வருமானவரி செலுத்தாமல் வருமானவரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அண்ணா நகரில் உள்ள நிறுவன நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணியாற்றும் டாக்டர்களின் வீடுகள், கோவில்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் கடந்த 7-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.100 கோடி வருவாய் மறைப்பு
கொரோனா நோய் பரவல் ஏற்பட்டபோது அதிக எண்ணிக்கையில் சோதனை செய்ததாகவும், அதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தை முறையாக கணக்கி்ல் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சுமார் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சோதனை நடத்தினர். கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பதிவேடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.