ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கொள்ளிடம் ஆற்றின் கரையில் கொட்ட தடை விதிக்கப்பட்டதால் ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-28 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றின் கரையில் கொட்ட தடை விதிக்கப்பட்டதால் ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய ஊராட்சிகள்

கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆணைக்காரன்சத்திரம் 2-வது பெரிய ஊராட்சியாகவும், மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலும் இருந்து வருகிறது. இதேபோல் கோபாலசமுத்திரம் 3-வது பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது.

ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொள்ளிடம் ெரயில் நிலையம் அருகே ஆற்றின் கரையில் கடந்த 30 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது.

குப்பைகள் கொட்ட தடை

கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டுவதால் ஆற்று தண்ணீர் மாசடைந்து அதில் வாழும் நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்ட நீர்வள ஆதாரத்துறை தடை விதித்தது. மீறி குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைத்தனர். மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தூய்மை தொழிலாளர்கள் அவதி

அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ெரயில் பாலம் அருகே ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் உள்ள 20 கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் அந்தந்த இடங்களிலேயே கொட்டி வைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்த ஊராட்சிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அங்குகொட்டி வைத்து வருகின்றனர். குப்பைகள் கொட்டுவதற்கு இதுவரை இடம் தேர்வு செய்யப்படாததால் தூய்மை பணி தொழிலாளர் அவதி அடைந்து வருகின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம மக்கள் கூறுகையில் இந்த 2 ஊராட்சிகளும் கொள்ளிடத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த 2 ஊராட்சிகளுக்கும் குப்பைகள் கொட்ட இடம் இல்லாததால் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் குப்பைகளில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

நிரந்தர குப்பை கிடங்கு

ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு புதிதாக குப்பை கொட்டுவதற்கு நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்