ஆண்டவன் உத்தரவு பெட்டியில்பசு-கன்றுக்குட்டி சிலை வைத்து பூஜை

Update: 2023-08-14 17:25 GMT


காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மண்ணால் செய்யப்பட்ட பசு-கன்றுக்குட்டி சிலை வைத்து பூஜிக்கப்படுகிறது.

ஆண்டவன் உத்தரவு பெட்டி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

இந்நிலையில் சென்னை பட்டவாக்கத்தை சேர்ந்த முரளிதரன் (வயது 36) என்ற பக்தரின் கனவில் உத்தரவான மண்ணால் செய்யப்பட்ட பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் சிலை ஒன்று நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு-1-ந் தேதி முதல் விருஷ்ப அஸ்திரம், தனூர்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், ரூபாய் 101, 6-எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

பால் பண்ணை

நேற்று உத்தரவு பொருள் கொண்டு வைத்த சென்னையை சேர்ந்த பக்தர் முரளிதரன் கூறியதாவது:-

கடந்த 1-ந்தேதி முதல் ஓசூர் பகுதியில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து கூட்டாக சுமார் 10 நாட்டு மாடுகளை வைத்து பண்ணை அமைத்து பால் விற்பனை தொழில் தொடங்கி செய்து வருகிறோம். கடந்த ஆடி 18-ந்தேதி எனது கனவில் ஒரு பெட்டியின் அருகில் நானும் எனது நண்பர்களும் நின்று கொண்டிருப்பதை போலவும், அந்த பெட்டியில் ஒரு சீட்டு இருப்பது போலவும், பெட்டியை திறந்து சீட்டை எடுத்து படிக்கும் போது அதில் பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் விதமாக அதில் எழுதப்பட்டிருந்தது போல் கடவுள் எனக்கு உணர்த்தினார். பின்னர் இது சம்பந்தமாக நான் சமூக வலை தளங்களில் தேடி பார்க்கும் போது காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பொட்டி பற்றியும், அதில் வைக்கும் பொருள் பற்றியும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று கோவிலுக்கு வந்து சாமியிடம் பூப்போட்டு கேட்டு உத்தரவு ஆனபின் பசு-கன்றுக்குட்டி சிலை வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பசுவினம் பெருகும்

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "தற்போது பசுவுடன் கூடிய கன்று உத்தரவாகியிருப்பதன் மூலம் பசுவினம் பெருகி நாட்டில் செல்வவளம் பெருகும். எனினும் இது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியவரும்." என்று கூறினர

மேலும் செய்திகள்