மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட அ.ம.மு.க. பிரமுகரால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட அ.ம.மு.க. பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமானத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் மதுரை வந்தார்.
விமான நிலைய உள்வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கிய பின்னர், அங்கிருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பஸ்சில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்தார். அப்போது அந்த பஸ்சில் அவருடன் பயணித்த ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீடியோவாக எடுத்துக்கொண்டே எதிர்ப்பு கோஷமிட்டார்.
உடனே, பஸ்சில் வந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், அவ்வாறு வீடியோ எடுத்தவரை தடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதால், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கோஷமிட்டவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 42) என்பதும், இவர் அ.ம.மு.க. பிரமுகர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமான வீடியோ வலைத்தளங்களில் பரவியது.
இதற்கிடையே மேற்கண்ட ராஜேந்திரன், அவனியாபுரம் போலீசில் நேற்று மாலை ஒரு புகார் அளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர், என்னை தாக்கியதுடன், என்னிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அவருடன் மதுரை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளும் புகார் அளிக்க சென்றிருந்தனர்.