பழனி முருகன் கோவிலில் ஆடி மாத கிருத்திகை உற்சவ விழா

பழனி முருகன் கோவிலில் ஆடி மாத கிருத்திகை உற்சவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-09 20:00 GMT

கிருத்திகை உற்சவ விழா

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கிருத்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாத கிருத்திகை உற்சவம் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

அதன்படி பழனி முருகன் கோவிலில் ஆடி மாத கிருத்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தங்கரத புறப்பாடு

முன்னதாக மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர்.

கார்த்திகை உற்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலையிலேயே அடிவாரம், கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் மயில்காவடி உள்பட பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்