ஆடி அமாவாசைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் - கலெக்டரிடம், இந்து முன்னணி மனு
நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.;
நெல்லை மாவட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை தினங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர் வழிபாடு நடத்தி திதி கொடுப்பது வழக்கம் ஆகும்.
இதில் ஆடி அமாவாசை தினத்தன்று நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோரை வழிபடுவார்கள்.
அத்தகைய ஆடி மாவாசை நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது. இந்து முன்னணி நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்ம நாயகம், துணைத்தலைவர் ராம செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
ஆடி அமாவாசை விழா நெல்லை மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். அன்றைய தினத்தில் பாபநாசம் காரையாறில் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். திருவிழாவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு வரை ஆடி அமாவாசை நாளில் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலின் போது அதை காரணம் காட்டி விடுமுறை அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் வசதிக்காக நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.