ஆடி அமாவாசை திருவிழா; சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை திருவிழாவான நேற்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-07-28 21:00 GMT

விக்கிரமசிங்கபுரம்:

ஆடி அமாவாசை திருவிழாவான நேற்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசை திருவிழா

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

ஆடி அமாவாசை நாள் அன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்வோரின் பாவங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு அலங்காரம்

இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி கோவில் வளாகத்தில் கால்நாட்டு விழா நடந்தது. திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். இவ்வாறு வந்த பக்தர்கள் அகஸ்தியர்பட்டியில் இருந்து அரசு பஸ்களில் கோவிலுக்கு சென்றனர். அங்கு குடில்கள் அமைத்து தங்கி இருந்தார்கள்.

நேற்று ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயர், கரடி மாடசாமி, தூசி மாடசாமி போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

பொங்கல் வைத்து வழிபாடு

கோவிலுக்கு வந்த பக்தர்கள் காலையிலேயே அருகில் உள்ள ஆற்றில் புனித நீராடினர். பேச்சியம்மன் சன்னதி, பட்டவராயர் சன்னதிகளுக்கு முன்பு பொங்கலிட தொடங்கினர். இதற்காக பல ஆயிரக்கணக்கான பெண்கள் வந்திருந்தனர். காலையில் தொடங்கிய பொங்கலிடும் நிகழ்ச்சி இரவு வரை தொடர்ந்தது.

கோமரத்தாடிகள் சங்கிலிகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அந்த பகுதியில் தாமிரபரணியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

பூக்குழி இறங்கினர்

மாலையில் பட்டவராயர், சங்கிலிபூதத்தார் சன்னதிகள் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவிழாவை முன்னிட்டு காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை சாக்குப்பையால் தயார் செய்யப்பட்ட தொட்டியில் போட்டு வைத்திருந்தனர். கோவில் திருவிழா ஏற்பாடுகளை கோவில் பொறுப்பாளர் டி.என்.எஸ்.எம்.சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, மருத்துவ துறை, சுகாதார துறை, பாதுகாப்பு துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்