மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பின் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும்; மக்கள் கருத்து
மின்வாரிய அலுவலகங்களில் நடக்கும் முகாம்களில் ஆதாரை இணைக்கும் மக்கள், அதற்கான அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினர்.
மின்வாரிய அலுவலகங்களில் நடக்கும் முகாம்களில் ஆதாரை இணைக்கும் மக்கள், அதற்கான அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினர்.
மின்இணைப்பு-ஆதார்
வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், விவசாய இணைப்புகள் என தமிழகம் முழுவதும் 2½ கோடி மின்இணைப்புகள் உள்ளன. இந்த மின்இணைப்புகளுடன், சம்பந்தப்பட்ட மின்இணைப்புதாரரின் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.
ஏற்கனவே ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான்கார்டு என ஒவ்வொன்றாக ஆதாருடன் இணைக்கப்பட்டது. தற்போது மின்இணைப்புடன், ஆதாரை இணைக்க வேண்டும் என்றதும் மக்கள் குழப்பமும், தயக்கமும் அடைந்தனர். இதற்கிடையே மின்கட்டணம் செலுத்த சென்ற மக்களிடம், ஆதாரை இணைக்கும்படி பணியாளர்கள் வலியுறுத்தினர்.
சிறப்பு முகாம்கள்
ஒருசில இடங்களில் ஆதாரை இணைக்காவிட்டால் மின்கட்டணத்தை செலுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்பதால், பொதுமக்கள் ஆதாரை இணைக்க தொடங்கினர். இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஆதார் இணைப்பு பணி நடக்கிறது. இதனால் மின்கட்டணம் செலுத்தும் மக்கள் மட்டுமின்றி மற்றவர்களும் ஆதாரை இணைத்து வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல்லில் மின்இணைப்புடன், ஆதாரை இணைத்த மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தெளிவுபடுத்த வேண்டும்
கோவிந்தராஜ் (அனுமந்தநகர்):- மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் 100 யூனிட் மின்சாரம் ரத்தாகிவிடும் என்று பரவலாக பேசுகின்றனர். ஆதாரை இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது. மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பை துண்டித்து விடுவார்கள் என்ற பயத்தில் மக்கள் ஆதாரை இணைக்கின்றனர். ஆதாரை இணைப்பதால் ஏற்படும் நன்மை பற்றி கூறினால் மக்கள் இன்னும் ஆர்வமுடன் வருவார்கள்.
நாகமணி (திண்டுக்கல் நன்னுபாசாகிப்தெரு):- மின்இணைப்புடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு கூறியிருக்கிறது. இதுபற்றி ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக கூறுவதால் மக்களிடம் தேவையற்ற அச்சமும், குழப்பமும் இருக்கிறது. எனவே ஆதார் இணைப்புக்கான அவசியத்தை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
நிர்மலா (குள்ளனம்பட்டி):- மின்கட்டணம் வசூல், ஆதார் இணைப்பு ஆகியவை தனித்தனியாக நடப்பதால் எளிமையாக இருக்கிறது. ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறியதால், வந்து இணைத்துள்ளேன். எதற்காக இணைக்கும்படி கூறினார்கள் என்று தெரியவில்லை.
சேசுராஜ் (மரியநாதபுரம்):- மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க போவதாவும், ஆதாரை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என்றும் பலரும் பேசுகின்றனர். இதனால் மக்கள் குழப்பத்துடன் வந்து ஆதாரை இணைக்கின்றனர். ஆதார் இணைப்பின் அவசியம் பற்றி கூறினால் மக்களின் குழப்பம் நீங்கிவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.