ஆதார் சேவை மையம் செயல்பட தொடங்கியது

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட தொடங்கியது.

Update: 2023-06-09 18:45 GMT

பேராவூரணி:

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட தொடங்கியது.

ஆதார் சேவை மையம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில், நீண்ட காலமாக ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த ஆதார் சேவை மையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தங்களுக்கு தேவையான ஆதார் அட்டை புதிதாக எடுக்கவும், திருத்தம் செய்யவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தநிலையில் பேராவூரணி அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

டோக்கன்

ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் அஞ்சல் அலுவலகத்தில் குவிந்ததாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதாலும், பலரும் ஏமாற்றமடைந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், அஞ்சல் அலுவலகத்தின் மாடியில் ஆதார் சேவை மையம் செயல்பட்டதால், முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு, பிறகு ஆதார் சேவை மையம் மீண்டும் தொடங்கி உள்ளது.

மேலும், இந்த ஆதார் சேவை மையம், தரைத்தளத்தில் தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் இடது புறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மாடிக்கு செல்லும் சிரமம் தவிர்க்கப்பட்டு, தரைத்தளத்திலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தரைத்தளத்தில்.....

"பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புதிய ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளவும் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வந்து சேவையை பெற்றுக் கொள்ளலாம்" என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைப்போல தாசில்தார் அலுவலக மேல் மாடியில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் ஆகியவை, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோயாளிகள் கோரிக்கையை ஏற்று, தரைத்தளத்திலேயே இயங்க தாசில்தார் சுகுமார் ஏற்பாடு செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்