91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பு
91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.;
சிறப்பு முகாம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லெப்பைக்குடிகாடு, குன்னம் உபகோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
இதுவரை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத 82 மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்து கொண்டு இணைத்து கொண்டனர். மேலும் மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த 12 மின் நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், செல்வராஜ், ரவிக்குமார், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆதார் எண் இணைப்பு
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கக்கூடிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 604 ஆகும். அதில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 596 மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது. அதில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்பந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண், மின் இணைப்பு எண், ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.