நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பொதுமக்கள் பெற ஆதார் எண் கட்டாயம் -தமிழக அரசு அறிவிப்பு

நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பொதுமக்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-12-17 00:26 GMT

சென்னை,

வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்கு 'ஆதார்' எண் கட்டாயமாக உள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு

மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசின் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளன.

தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது.

இங்கு பொதுமக்கள் சென்று ஆதார் எண்ணை இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசின் அனைத்து நிதி உதவி திட்ட பயன்கள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

ஆதார் அவசியம்

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்தின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆதார் ஒழுங்குமுறை சட்டப்படி, தமிழ்நாடு மின்னாளுமை முகமையுடன் கருவூலக் கணக்குத் துறை இணைந்து செயல்படுகிறது. கருவூலக் கணக்குத் துறை, சம்பளம், ஓய்வூதியம் வழங்கல் மற்றும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சம்பளப் பட்டியல் தயாரிப்பு, மாத ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசின் சட்டத்தின் கீழ், மானியங்கள் உள்ளிட்ட நிதி சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் இனி தங்களது ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலக் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களினால் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை அளிப்பது அவசியமாகிறது.

கூடுதல் ஆதாரம்

இந்த திட்டங்களின் பலனை அடைய விரும்புகிறவர் யாருக்கும் ஆதார் எண் இல்லை என்றால் அவர்கள் இனி ஆதார் எண்ணை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் எண் அளிக்கப்படுவதற்கு முன்பே திட்டத்தின் பயனைக் கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணுக்காக பதிவு செய்துள்ளதற்கான அடையாள சீட்டுடன், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு அட்டை, வேளாண்மை கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், 'கெசட்டட்'அலுவலர் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று, அரசுத் துறை அளிக்கும் ஏதாவது ஒரு சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும்.

திட்ட பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரிவர செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாளப் பதிவை மேற்கொள்ளலாம். அல்லது, ஆதார் ஓடிபி முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்.

இவை எதுவுமே செயல்படாத நிலையில், ஆதார் கடிதத்தை கொடுத்து அதிலுள்ள கியுஆர் கோட் மூலம் அடையாளத்தை சரிபார்த்து பயனை அளிக்கலாம். அதன்படி பயனாளிகளுக்கு பயனை வழங்கும் அனைத்து வகையான முறைகளையும் பின்பற்ற கருவூலக் கணக்குத் துறை தயாராக இருக்க வேண்டும்.

குழந்தை பயனாளிகள்

திட்டத்தின் பயனாளி குழந்தைகளாக இருந்தால், அவர்களும் ஆதார் நம்பரை வழங்க வேண்டும். அவர்களிடம் ஆதார் எண் இல்லாவிட்டால், ஆதார் நம்பரை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்று அல்லது பிறப்புச்சான்று, பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பெயர்கள் அடங்கிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

இதுதவிர, பயனாளியின் பெற்றோர், பாதுகாவலர்களுடனான உறவு குறித்த சான்றாக, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, முன்னாள் படைவீரர் என்பதற்கான அட்டைகள், ஓய்வூதிய அட்டை, படைவீரர் கேன்டீன் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

ஆதார் அங்கீகாரம் பெறுவதில், விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகரிக்கலாம். அல்லது ஓடிபி மூலமாகவும் அங்கீகாரம் அளிக்கலாம். எதுவுமே சாத்தியப்படவில்லை என்றால், ஆதார் கடித கியூஆர் கோட் மூலம் அடையாளத்தை உறுதி செய்யலாம்.

14-ந் தேதி முதல் அமல்

அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தினால் எந்த ஒரு குழந்தைக்கும் திட்டத்தின் பயன் மறுக்கப்பட்டுவிடக் கூடாது. பயனாளிக்கான தகுதி இல்லாத எவரும் திட்டத்தின் கீழ் பயன் பெறவில்லை என்பதை திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் உறுதி செய்ய வேண்டும். பயனாளி அளிக்கும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் சம்பந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். 14-ந் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்