300 பேர் ஆதார் கார்டில் திருத்தம்
300 பேர் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொண்டனர்.
ஊட்டி,
மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் அட்டையில் திருத்த பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தனலட்சுமி கூறும்போது, ஊட்டி மற்றும் குன்னூர் தலைமை தபால் நிலையம், ஊட்டி மார்க்கெட், எமரால்டு, இந்துநகர், அருவங்காடு, வெலிங்டன், கோத்தகிரி, கூடலூர் பஜார், மேலூரில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. முகாமில் புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் செல்போன் எண், இ-மெயில் பதிவு புதுப்பித்தல் சேவைகளுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மாவட்ட முழுவதும் நேற்று ஒரே நாளில் 300 பேர் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்தனர் என்றார்.