எண்ணூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
எண்ணூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவொற்றியூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் திருவண்ணாமலையில் விக்னேஷ் (வயது 19) என்பவருடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று அந்த சிறுமியை மீட்டு எண்ணூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் விக்னேஷ் அந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் நண்பராக பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் திருவண்ணாமலையில் இருந்து வந்த விக்னேஷ் உடன் அந்த சிறுமி சென்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு விக்னேஷின் வீட்டிலேயே தங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.