பெருங்களத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

பெருங்களத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-05-28 08:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, என்.எல்.புரத்தை சேர்ந்தவர் தனஅரசு (வயது 23). இவர், கூடுவாஞ்சேரியில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை பணிமுடிந்து கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெருங்களத்துார் சிக்னலை கடந்து சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது சாலையோரம் கட்டப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய தனஅரசு, சம்பவ இடத்தி்லேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராணா (22). இவர், அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாய்ந்து சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் விழுந்தது.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த ராணா, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிவானந்தம் (43) மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்