30 கிலோ இறைச்சியை விற்பனைக்காக கொண்டு வந்த வாலிபர் கைது

காட்டுப்பன்றிகளை வேட்டையாடி 30 கிலோ இறைச்சியை விற்பனைக்காக கொண்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-25 13:11 GMT

விழுப்புரத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதனை திருவண்ணாமலை அருகில் உள்ள அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையின் இன்று காலை அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அதேபகுதியை சேர்ந்த டேனியல் (வயது 20) என்பதும், விழுப்புரம் கும்மளம் என்ற பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் இறைச்சி சுமார் 30 கிலோவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்