சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் பயணித்த இளம்பெண் இறந்த நிலையில் மீட்பு
கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள்.
கோவை,
கோவை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 23). என்ஜினீயரிங் படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து உள்ளார். இருந்தபோதிலும் குணமாகவில்லை. இதனால் அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு, சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருடன் பணிபுரியும் ஒருவர் மகாலட்சுமியை ஆம்னி பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். மகாலட்சுமி பஸ்சின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அந்த நபர் பின்னால் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
நேற்று காலை 5 மணியளவில் அந்த பஸ் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். ஆனால் மகாலட்சுமி மட்டும் எழும்பவில்லை. அவர் அமர்ந்து இருந்த இருக்கையிலேயே படுத்து இருந்தார். உடனே அவருடன் வந்தவர், அவரை எழுப்ப முயன்றபோது எழும்பவில்லை. மாறாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் ஏறியதும் இரவு 11 மணியளவில் மகாலட்சுமி தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பஸ்சில் வந்து கொண்டு இருப்பதாக கூறி உள்ளார். ஆனால் திடீரென்று உயிரிழந்து விட்டார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும் என்றனர்.