தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்

வீட்டுமனை பட்டாவில் திருத்தம் செய்யக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-17 17:47 GMT

வீட்டுமனை பட்டாவில் திருத்தம் செய்யக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பெண் தர்ணா

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை, குறைகள் மனுக்களை பெற்று கொண்டார். வேலூரை அடுத்த ஒடுகத்தூர் மலைகன்னிகாபுரத்தை சேர்ந்த ஓய்வுப்பெற்ற ராணுவவீரரின் மகள் விஜயலட்சுமி மனு அளிக்க வந்தார். அவர் திடீரென குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது கூட்டம் முடிந்து வெளியே வந்த கலெக்டர், அந்த பெண்ணிடம் விசாரித்தார். அப்போது அவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டுமனையை குறைவாக காண்பித்து பட்டா வழங்கி உள்ளனர். அதனை திருத்தம் செய்யும்படி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அதற்கு கலெக்டர், மீண்டும் ஒருமுறை மனு கொடுங்கள். உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த இளம்பெண் புதிதாக மனு அளிக்க மாட்டேன். எனக்கு வீட்டுமனை பட்டாவில் ஏற்பட்ட பிழையை திருத்தி தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.

தரையில் அமர்ந்த கலெக்டர்

இதையடுத்து கலெக்டர் அந்த பெண்ணின் எதிரே தரையில் அமர்ந்து இதுதொடர்பாக பழைய மனு இருந்தால் கொடுக்கும்படி கூறினார். உடனே இளம்பெண் பழைய மனுவின் ஜெராக்ஸ் நகலை கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து கலெக்டர் அந்த பெண்ணை கைது செய்யும்படி உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்