கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-16 18:45 GMT

தக்கலை:

வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை அருகே நடந்த இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொத்தனார் மனைவி

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 40), கொத்தனார். இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் வேலைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சிவலெட்சுமி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜயன் (9) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அதன் பிறகு சிவலெட்சுமி தனது மாமனார் அய்யப்பன் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

தகராறு

இதனால் வெளிநாட்டில் உள்ள ராஜன் அவ்வப்போது மனைவி, பிள்ளைகளுடன் போனில் பேசி வந்தார். அதன்படி ஒருநாள் பேசியபோது கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் போனில் பேசும்போதெல்லாம் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த ஒரு வாரமாக ராஜன் மனைவியோடு பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கணவர் தன்னிடம் பேசாததால் சிவலெட்சுமி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் சிவலெட்சுமி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களுக்கு இரவு உணவை சமைத்தார்.

மாலையில் பள்ளி முடிந்து சிவலெட்சுமியின் மகன் அஜயன் வீட்டுக்கு வந்து கதவை திறந்தார். அப்போது தாயார் சிவலெட்சுமி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதறி அழுது கொண்டே அருகில் வசித்து வரும் தனது தாத்தாவிடம் கூறினார். அவரும் ஓடி வந்து பார்த்து அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

போலீஸ் விசாரணை

பின்னர் இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் பேசாததால் சிவலெட்சுமி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக வெளிநாட்டில் இருக்கும் கணவர் ராஜன் ஊர் திரும்பிய பிறகு அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கணவர் பேசாததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்