கொடுத்த கடனை கேட்டு அண்ணன் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உத்திரமேரூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டு அண்ணன் திட்டியதால் மனம் உடைந்த தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், வயலூர் வள்ளி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பானுப்பிரியா (29). இவர்களுக்கு வைஷ்ணவி (12), பூஜா (8), கருப்புசாமி (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
பானுப்பிரியா தனது அண்ணன் பரமசிவத்திடம் ரூ.16 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பரமசிவம் நேற்று முன்தினம் கடனை திருப்பித் தரக் கூறி பானுப்பிரியாவிடம் கேட்டார். அதற்கு பானுப்பிரியா பணம் இப்போது இல்லை என்று கூறினார். அதற்கு அண்ணன் பரமசிவம் பானுப்பிரியாவை கடும் வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த பானுப்பிரியா கணவரிடம் சமையலுக்கு வேண்டிய பொருளை வாங்கி வரச் சொல்லி கடைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பானுப்பிரியா வீட்டின் உத்திரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். வீட்டுக்கு வந்த சத்தியமூர்த்தி மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெருநகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருநகர் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.