தீயில் சிக்கிய மகனை காப்பாற்ற முயன்ற இளம்பெண் உடல் கருகி பலி
விக்கிரமங்கலம் அருகே தீயில் சிக்கிய மகனை காப்பாற்ற முயன்ற இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
சேலையில் தீப்பற்றியது
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை கிராமம் இந்திரா காலனியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பூபதி (வயது 28). இவர்களுடைய மகன் பிரஜின் (2½). சம்பவத்தன்று பூபதி தனது வீட்டின் வெளியே விறகு அடுப்பில் உணவு சமைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் அங்கு வைத்திருந்த மண்எண்ணெயை கீழே கொட்டியதில் அவன் மீது தீப்பற்றியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூபதி தனது மகனை தீயில் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவருடைய சேலையில் தீப்பற்றியது. இதில் 2 பேரும் உடல் கருகி வலியால் அலறி துடித்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வினோத் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பூபதி மற்றும் பிரஜினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். சிறுவன் பிரஜினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பூபதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.