போடி அருகே பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய வாலிபர்

போடி அருகே பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-06 16:45 GMT

போடி அருகே உள்ள டி.சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் மெர்சிலின் கிரிஜா (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அசோக்குமாருக்கும் (29) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் அசோக்குமாருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று அவரும், அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மெர்சிலின் கிரிஜாவை, அவரது கணவர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அசோக்குமார், தனது மனைவியையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து மெர்சிலின் கிரிஜா, போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அசோக்குமார், அவரது உறவினர்கள் மரியசவரி, பாத்திமா மேரி, பீட்டர், வினோத், வில்லியம் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்