பள்ளிக்குள் புகுந்து 2 ஆசிரியைகளை பிளேடால் கீறிய வாலிபர் கைது

பெரியகுளத்தில் பள்ளிக்குள் புகுந்து 2 ஆசிரியைகளை பிளேடால் கீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-12 21:15 GMT

பெரியகுளத்தில் பள்ளிக்குள் புகுந்து 2 ஆசிரியைகளை பிளேடால் கீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி ஆசிரியை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் என்ற ரமேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பிரியங்கா (30) என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். ஆனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பிரியங்கா விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரியங்கா, தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் பெரியகுளம் வடகரையில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பிரியங்கா பள்ளிக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு வகுப்பறையில் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

பிளேடால் கீறினார்

அப்போது அந்த பள்ளிக்கு வந்த ரமேஷ், திடீரென்று பிரியங்கா இருந்த வகுப்பறைக்குள் வேகமாக சென்றார். அவரை பார்த்ததும் பிரியங்கா தட்டிக்கேட்டார். கண்இமைக்கும் நேரத்தில் ரமேஷ் தனது கையில் வைத்திருந்த பிளேடால் பிரியங்காவை சரமாரியாக கீறினார். இதனால் வலியால் துடித்த அவர் அபயகுரல் எழுப்பினார். இதனால் பக்கத்து வகுப்பறையில் இருந்த மற்றொரு ஆசிரியை அங்கு வந்து ரமேசை தடுக்க முயன்றார். அப்போது அந்த ஆசிரியையும் ரமேஷ் பிளேடால் கீறிவிட்டு அங்கு தகராறு செய்துகொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்து வகுப்பறையில் இருந்த பள்ளி குழந்தைகள் அலறியடித்தபடி பள்ளி வளாகத்துக்குள் அங்குமிங்குமாக ஓடி கூச்சலிட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ரமேஷ் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இருப்பினும் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து ரமேசை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே பிளேடால் கீறியதில் காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியை ஆகியோர் சிகிச்சைக்காக பெரியகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து ரமேசிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஏற்கனவே குடும்ப பிரச்சினை காரணமாக பிரியங்காவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன், அங்கிருந்த மாமியார் தமிழ்செல்வியை தாக்க முயன்றது தெரிய வந்தது.. இதனை தடுக்க முயன்ற பிரியங்காவின் உறவினர் முரளி என்பவரை ரமேஷ் தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை தேடி வந்தனர். இந்தநிலையில் தான் நேற்று பள்ளியில் புகுந்து மனைவி உள்பட 2 பேரை பிளேடால் கீறிய சம்பவத்தில் ரமேஷ் சிக்கினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியைகளை பிளேடால் கீறிய சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்